Skip to main content

“இனி தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட மோடிக்கு உரிமையில்லை” - மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

"Modi doesn't even have the right to utter the word Tamil anymore" - M.K. Stalin's strong condemnation

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரத் நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிகள் சட்டத்தை பாரத் சாக்‌ஷ்யா எனவும் பெயர் மாற்றம் செய்யும் சட்டத்திருத்த மசோதா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

"Modi doesn't even have the right to utter the word Tamil anymore" - M.K. Stalin's strong condemnation

 

இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்தச் செயலுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய மசோதா ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும். இது இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை.

 

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை வரலாற்றில் தமிழகமும் திமுகவும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம். மீண்டும் தளராத உறுதியுடன் அதைச் செய்வோம். இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்