தி.மு.க. தலைமை தமிழகமெங்கும் 16,000 இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவது என முடிவெடுத்து, அதன் அடிப்படையில் பல இடங்களில் கூட்டத்தை நடத்திவருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து அ.தி.மு.க. ஆட்சியை விமர்ச்சித்தும் வருகின்றனர்.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளோடு அருகில் குமாரவலசு ஊராட்சியில் வெள்ளோடு - ஈரோடு செல்லும் சாலையில், வருகிற ஜனவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
இது பற்றி தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துச்சாமி கூறுகையில், “இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளோம். கூட்டத்தில் பங்கேற்பவர்கள், கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
முன்னதாக, 2ஆம் தேதி மதியம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வரும் மு.க.ஸ்டாலின், சிறுவலூர் என்ற கிராமத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இரவு ஈரோட்டில் தங்குகிறார். 2ஆம் தேதி காலை ஈரோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கரூரில் மதியம் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.