Skip to main content

அமைச்சரின் விளம்பர மோகம்... நெரிசலில் சிக்கிய மக்கள்...

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

தனியார் அரிசி ஆலை அதிபர்கள் 6 ஆயிரம் கிலோ அரிசியினை கரோனா நிவாரணமாக வழங்கியிருக்க, அதனைப் பார்வையிட வந்த அமைச்சர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் மோகத்தில் எவ்வித முன்னேற்பாடுமில்லாமல் அங்கேயே துவக்கி வைக்க அரிசியை வாங்கும் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

கரோனா ஊரடங்கு நிவாரணமாக, சிவகங்கை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாரிகள் சங்கத்தினர் மாவட்டம் முழுமைக்கும் தாலுகா வாரியாக இலவசமாக அரிசி வழங்க முன்வந்து சங்கத் தலைவர் படிக்காசு தலைமையில் ஒன்றிணைந்து காரைக்குடி தாலுகா பகுதிக்கு மட்டும் 6 ஆயிரம் கிலோ அரிசியினை வழங்கினர். ஆறாயிரம் கிலோ அரிசியும் காரைக்குடியிலுள்ள பள்ளி ஒன்றில் சேகரம் செய்து வைக்கப்பட்டிருக்க, அங்கேயே அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு தாலுகா அலுவலகத்தில் வைத்தே மக்களுக்கு அரிசியை வழங்குவதாக வருவாய்த்துறையினர் தரப்பில் அறிவுறத்தப்படிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமையன்று கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்ட திருப்புத்தூர் மற்றும் காரைக்குடி மீனாட்சிபுரம் பொதுமக்களுக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் தலைமையில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி மற்றும் 7 காய்கறிகள் 150 குடும்பங்கள் பெற்று பயன்பெறும் வகையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், அங்கிருந்துப் புறப்பட்ட அமைச்சர், ஆட்சியர் டீம் மக்களுக்கு வழங்குவதற்காக சேகரம் செய்து வைக்கப்பட்டிருக்கும் 6 ஆயிரம் கிலோ அரிசியை காணவும், தனியார் அரிசி ஆலை அதிபர்களுக்கு நன்றி கூறவும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு புறப்பட்டனர். இதற்கு முன்னதாக அமைச்சர் இங்கு அரிசி வழங்கவுள்ளார் என்ற வதந்தியின் அடிப்படையில் பள்ளியின் முன்புறம் ஆயிரக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்ற மக்களை காவல்துறை கலைத்து அனுப்பி வைத்தனர். சரியாக நண்பகல் 1 மணிக்கு அங்கு வந்த அமைச்சர் பாஸ்கரன் அம்பலத்திடம் அரிசியினை காண்பிக்க, ஆர்வமிகுதியில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் விளம்பர மோகத்தில் அங்கிருந்த சில நபர்களுக்கு அரிசியை கொடுத்து துவக்கி வைத்து விட்டு வெளியே சென்றார்.

 

g



அவர் சென்ற சில நொடிகளிலேயே பள்ளியை சூழ்ந்த மக்கள் வாசற் கேட்டை தள்ளி, நெரிசலில் சிக்கி முட்டி மோதிக் கொண்டு உள்ளே நுழைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னேற்பாடு இல்லாமல் கூட்டம் கூட தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், காரைக்குடி துணைச்சரக டிஎஸ்பி.அருண் தலைமையிலான காவல்துறையினரும் கூட்டத்தினை கட்டுக்குள் கொண்டு வந்து அரிசியினைக் கொடுத்து சமாளித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்