சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை நாம் எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தமிழ்நாட்டில் நிகழும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டைத் திசைதிருப்பவே இந்த சனாதன சர்ச்சை விவகாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் சனாதன சர்ச்சை குறித்து விளக்கமளித்து அமைச்சர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப் பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப் போட விரும்பவில்லை, பிழைத்துப் போகட்டும்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன. இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம்.
அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால் மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.
மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” எனக் குறிப்பிட்டு 8 பக்கம் கொண்ட நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.