Skip to main content

“சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படித்துவிட்டு அரசு வேலை ஏன் கேட்கிறீர்கள்” - நீதிபதிகள் காட்டம்!

Published on 10/03/2025 | Edited on 10/03/2025

 

Judges questioning Why are you asking for a govt job after studying in the CBSE syllabus

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் தேனியில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தார். இவர் தனது பள்ளிக்கல்வியைத் தமிழ்வழியில் படிக்காததால் தமிழக அரசின் அரசு பணியாளருக்கான விதிப்படி தமிழ் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் இவர் தமிழ்த் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதன் காரணமாக இவரைப் பணி நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து இவர் மின்வாரியத்துறையின் பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கின் மனுதாரர் தமிழர் என்பதால் அவருக்குப் பணி வழங்கலாம்” என உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியத்துறையின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (10.03.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மின்வாரியத்துறையின் சார்பில் வாதிடுகையில், “தனி நீதிபதியின் உத்தரவு அரசு விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் தனித் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அவர்  தனித்  தமிழ்த் தேர்வில் வெற்றி பெறவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்” என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயக்குமார் தமிழர் என்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்கிறார். ஆனால் அவர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெறவில்லை. எனவே இவருக்கு எவ்வாறு பணி நீட்டிப்பு வழங்க முடியும். அரசு உத்தரவுப்படி அரசு வேலையில் பணிபுரியக் கூடியவர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படித்துவிட்டு அரசு வேலை வாங்கி விடுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் படித்துவிட்டு அரசு வேலை ஏன் கேட்டு வருகிறீர்கள்.எனவே இந்த வழக்கு தொடர்பாகத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.  மேலும் எதிர் மனுதாரர்களின் வழக்கு விசாரணைக்காக இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்