திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மாநாட்டு சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று (18-01-24) காலை தொடங்கி வைத்தார். மேலும், அங்குள்ள அண்ணா, பெரியார் மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாடு மட்டுமல்ல, அனைவருமே இந்த மாநாட்டில் என்ன என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னெடுப்பாக இந்த மாநாடு அமையும். அதே போல், கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இழக்கப்பட்ட உரிமைகளை எல்லாம் மீட்கின்ற வகையில் இளைஞர்களை தயார்படுத்தக்கூடிய மாநாடாகவும் இது அமையும்” என்றார்.
அப்போது அவரிடம், ‘ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம். அதை அரசியலாக பார்க்கக்கூடாது’ என்று அதிமுக கூறியுள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். திமுக எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அங்கே கோவில் வருவது எங்கள் பிரச்சனை கிடையாது. ஆனால், அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் பொருளாளர் இது தொடர்பாக, ‘ஆன்மீகத்தையும்,அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்’ என்று சொல்லிருக்கிறார்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, கால் வலி இருப்பதால் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன் என்று இபிஎஸ் கூறியிருக்கிறாரே என்று கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் தவழ்ந்து தவழ்ந்து போறதுனால அடிக்கடி அவருக்கு கால் வலி வருகிறது போல” என்று கூறிச் சென்றார்.