தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனை மத்திய அமைச்சராக நியமித்ததை அடுத்து அண்ணாமலையை தமிழ்நாடு மாநிலத் தலைவராக பாஜக தலைமை நியமித்துள்ளது. இதுகுறித்து திராவிட இயக்கப் பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். அவரது பதில்கள் பின் வருமாறு...
மோகன் ராஜலு, ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன, சி.பி. ராதாகிருஷ்ணன், ராகவன், கோவை முருகானந்தம், இல. கணேசன் என பல தலைவர்கள் தமிழக பாஜகவில் இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்துள்ளனர். அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
உழைப்பவனுக்கு உதையும், உறங்குபவனுக்கு மகுடமும் அளிப்பதுதான் பாஜகவின் நியாயம். அந்தக் கட்சியில் உழைத்தவர்கள் லால் கிருஷ்ணா அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, எஸ்.வி. சின்ஹா என பலர் உள்ளனர். இதில் லால் கிருஷ்னா அத்வானி ரத யாத்திரையைத் துவங்கியவர், கரசேவை இயக்கத்திற்கு முகம் தந்தவர், பாபர் மசூதியை உடைத்தெறியும் வேள்வியில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வீதியில் நின்றவர். உமா பாரதி மற்றும் கட்சிக்கு சித்தாந்த பலம் தந்த பேராசிரியராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, ஆட்சியராக இருந்த எஸ்.வி. சின்ஹா இவர்களை எல்லாம் பலிகொடுத்த கட்சிதான் அந்தக் கட்சி.
இதிலிருந்து தெரிகிறது, உழைப்பவனுக்கு உதையும் உறங்குபவனுக்கு மகுடமும் கொடுத்து அழகு பார்க்கிற கட்சிதான் பாஜக. இன்று அமித்ஷா போன்றவர்களின் கையில் அந்தக் கட்சி சிக்கியிருக்கிற காரணத்தினால் உழைப்பவன் நிராகரிக்கப்பட்டு ரத்தக் கண்னீர் சிந்துகிறான். மோகன் ராஜலு போன்றவர்களெல்லாம் கட்சிக்காக நிறைய தியாகம் செய்தவர்கள். காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி, அவர் உயிர் பிழைத்ததே புண்ணியம் என்று கருதுகிறது அவரது குடும்பம். ஆனால், அவருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பொறுப்பும் இல்லை. அதேபோல் அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை.
இவர் இரண்டு முறை வாஜ்பாய் கேபினட்ல இருந்தவர், மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால் தொகுதி கொடுக்கவில்லை. இப்போது இடைத்தேர்தல் வந்தபோது தொகுதி கொடுத்தார்கள், ஆனால் தோற்றுப்போனார். கேரளாவில் ஒரு இடத்திலும் பாஜக வெற்றிபெறாமல் துடைத்தெறியப்பட்டது. ஆனால் அங்கு இருக்கிற முரளிதரனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்திருக்கிறது. வெற்றிபெறாத முரளிதரனுக்கு வாய்ப்பு கொடுத்த நீ, ஏன் தமிழகத்தில் அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை? ஆகவே உழைப்பவர்களை உதாசீனம் செய்வதும், விளம்பர பிரியர்களையும், வித்தாரக் கள்ளர்களையும் தூக்கி உயர வைத்துக் கொண்டாடுவதும் பாஜகவின் குணம். இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்தமாட்டார்கள். அதனால் பாஜகவில் உழைப்பவர்கள் எல்லாம் நெஞ்சுடைந்து போயிருக்கிறார்கள்.