தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “தி.மு.க அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், தந்தையைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த சி.வி.சண்முகம், வாரிசு அரசியல் பற்றி பேசலாமா?
‘உதயநிதி என் கால் தூசுக்கு சமம்’ என்று சி.வி.சண்முகம் பேசுகிறார். சி.வி.சண்முகத்தின் அப்பா, எம்.ஜி.ஆர். காலத்தில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க அமைப்பாளராக இருந்தவர். அவர் எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இவருக்கு தி.மு.க.வை பற்றியோ, வாரிசு அரசியல் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.
அவருடைய (சி.வி.சண்முகம்) அண்ணனுக்கு வேலை வேண்டுமென்று நான் அமைச்சராக இருந்தபோது என்னிடம் கேட்டத்தின் பேரில், அவருடைய அண்ணனுக்கு வேலை போட்டுக் கொடுத்தவனே நான்தான். அந்த மாதிரி இருந்தவங்க எல்லாம், இன்னைக்கு வந்து பேசுறாங்க. எப்படியோ ஊரை ஏமாற்றி ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கிறார். அன்று உங்களுடன் வந்த லட்சுமணனைக்கூட கையில் வைத்துக்கொண்டு ஒழுங்காக செயல்பட தெரியவில்லை. சி.வி.சண்முகம் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால், அரசியலில் ஒரு நாகரிகத்தோடு பேச வேண்டும்” என்று பேசினார்.