“இரு விரல் சோதனை நடைபெற்றதாக ஆளுநர் கூறினால் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம்” என அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.
சிதம்பரத்தில் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக நகர செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்துப் பேசினார்.
அவர் பேசும்பொழுது, “மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் 80 சதவீதம் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை என ஒரு பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அது வரும் செப்டம்பர் 1-ந் தேதியிலிருந்து வழங்கப்படும். இதுபோல எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு சொன்னதையும் சொல்லாததையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார்.
தமிழக ஆளுநர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்றும், அதற்கு உதாரணம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்ர்களின் குழந்தைகளுக்கு இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் இரட்டை விரல் சோதனை நடைபெற்றது என்று ஒப்புக் கொண்டுள்ளார் என்றால் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது என்று அவர் ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம். தமிழக அரசு பிராமணர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. திமுகவிலும் அதிக பிராமணர்கள் உள்ளார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தை திருமணங்களை நடத்தி வருகிறார்கள் என்ற புகார் தமிழக அரசுக்கு வந்ததையொட்டி அதனை தடுக்கும் விதமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து தரப்பிலும் குழந்தை திருமணம் நடைபெற்றதையொட்டி அவர்களுக்கும் இதே போல் குழந்தை திருமண சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தீட்சிதர்களுக்கு மட்டும் நடந்தால் ஆளுநர் இதுபோன்று பேசுகிறார், கொதித்து எழுகிறார். மற்ற சமூகங்களில் குழந்தை திருமணம் நடவடிக்கைக்கு அவர் வாய் திறக்காதது ஏன்?” என்றார்.