சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதன் பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசுக் கல்லூரிகளில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை 17.88% அதிகரித்துள்ளது.
ஆளுநர் அவரது வேலையைச் செய்து கொண்டுள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று என்ன மாதிரியான பிரச்சாரம் செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரியும். அவர் கல்லூரிகளில் கல்வியைப் பற்றிப் பேசுவதை விட அரசியல் பற்றிப் பேசுவது தான் அதிகமாக உள்ளது. அதையும் நாங்கள் பார்த்துக் கொண்டுள்ளோம். இளைஞர்கள் மாணவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டுக்கென்று ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஒரு குழு உருவாக்கியுள்ளார். குழுவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும்” என்றார்.