





சேலத்தில் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநகரின் முக்கிய பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் குழந்தையைக் கொஞ்சியும், மூதாட்டியைக் கட்டியணைத்தும், சாலையோர கடையில் தேநீர் அருந்தியும் மக்களிடம் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு பெறுகின்றன. மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை நேரடியாகவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றன. சேலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 10 மணியளவில், சேலம் பட்டைக்கோயில் அருகே பரப்புரையைத் தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பூரண கும்ப மரியாதையும் அளித்தனர்.
கடந்த 22ம் தேதி பரப்புரை தொடங்கியது முதல் திறந்த வேனில் சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று வீதி வீதியாக நடந்து சென்றே வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். வீதியின் இருபுறங்களிலும் உள்ள காய்கறி கடைகள், பழக்க-டைகள், மளிகைக்கடைகள், பாத்திரக்கடைகள், தேநீர் கடைகள் என ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளரின் படம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் அவரே மக்களிடம் விநியோகம் செய்தது, மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
பட்டைக்கோயில் அருகே தொடங்கி வ.உ.சி பூ மார்க்கெட் வரை நடந்து சென்று வாக்குகள் கேட்டார். வ.உ.சி. மார்க்கெட் அருகே ஒரு மாம்பழக்கடைக்குள் புகுந்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த அவர், 'மாம்பழ சீசன் தொடங்கிவிட்டதா? பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கக்கூடாது. இயற்கையாக பழுத்த பழங்களையே விற்பனை செய்ய வேண்டும்,' என்றார். அதேபோல் பூ வியாபாரிகளைச் சந்தித்த அவர், 'மலர்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறீர்களா? அல்லது ஏஜண்டுகள் மூலமாக கொள்முதல் செய்கிறீர்களா? மலர்கள் வாடிப்போகாமல் இருக்க ஏதேனும் குளிர்சாதன வசதிகள் இருக்கிறதா?' என க்கேட்டறிந்தார்.
பழ வியாபாரிகள், பெரிய தட்டில் மாம்பழங்களையும், வாழைப்பழங்களையும், இலைகளையும் வைத்து முதல்வருக்கு பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் வ.உ.சி. மார்க்கெட் அருகே, எடப்பாடி பழனிசாமி பத்து நிமிடங்கள் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ''சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த வ.உ.சி. மார்க்கெட் நவீனமாக்கப்பட உள்ளது. இந்த மார்க்கெட்டில் குப்பைகள் தேங்காமல் இருக்க அன்றாடம் அகற்றப்பட்டு, அவை உரமாக மாற்றப்பட உள்ளன. மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பான அரசாக அதிமுக அரசு விளங்கும். எல்லோரும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,'' என்றார்.
பரப்புரை பயணத்தின்போது சாலையோரம் இருந்த ஒரு தேநீர் கடையில் புகுந்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், தேநீர் போடும் தொழிலாளியிடம், 'உங்களுக்கு ஒரு நாள் ஊதியம் எவ்வளவு கிடைக்கும்? மனைவி, குழந்தைகள் என்ன செய்கின்றனர்?' என்று கேட்டறிந்தார். அந்தக்கடையில் அவரும், தொண்டர்களும் தேநீர் அருந்தினர். கட்சித் தொண்டர் ஒருவரின் குழந்தையை தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார். ஒரு மூதாட்டியை கட்டி அரவணைத்தும் வாக்கு சேகரித்தார்.
கன்னிகாபரமேஸ்வரி கோயில் நிர்வாகக்குழு சார்பிலும் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தரப்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும், அந்த மனுவை பரிசீலிப்பதாக முதல்வர் கூறினார். இதையடுத்து அவர் நேராக சூரமங்கலத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று ஓய்வெடுத்தார்.
மாலை 3 மணிக்கு மேல் தாதகாப்பட்டி, சீலநாய்க்கன்பட்டி, உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.