வேலூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தி.மு.க.வின் 75 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் தலைமையில் வேலூர் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “அரசியலில் சில நேரங்களில் ஏமாற்றம் வரும், அவமானம் வரும், வெறுப்பு வரும். அந்த நேரத்தில் இயக்கத்தையும் கட்சியையும் நினைத்துக் கொண்டால் அவையெல்லாம் பறந்து போய்விடும். அப்படி ஏமாற்றத்தையும், அவமானங்களையும் நினைத்திருந்தால் நான் சவுகரியமாக எம்.ஜி.ஆர் உடன் இருந்திருக்க முடியும். ஆனால், எனக்கு கட்சி மலையாக இருந்தது. அவையெல்லாம் கட்சிக்கு முன்னால் தூசாகத் தெரிந்தன. கட்சியில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசி, பேசி வளர்ந்தவன் நான்.
அதன் விளைவாகத்தான், ஒரு குக்கிராமத்தில் பிறந்து கட்சியின் நான்காவது பொதுச் செயலாளராக அமர்ந்திருக்கிறேன். இது ஒன்றே போதும் எனது பரம்பரைக்கு. இவ்வளவும் கட்சியால் வந்தது. நம்மை விட கட்சி பெரியது. பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் ஆட்சியை நடத்தப் போகிறாரா? அல்லது அமெரிக்காவைப் போல் அதிபர் ஆட்சியை கொண்டு வரப் போகிறாரா, தேர்தலை உடனே நடத்தப் போகிறாரா அல்லது தள்ளி வைக்கப் போகிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சேர்த்தே தேர்தல் வருமா என்பது மட்டும்தான் கேள்விக்குறி. அதனால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என நினைத்து நாம் பணியாற்ற வேண்டும். தேர்தல் வருதோ இல்லையோ நாம் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.