அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., க்கள், எம்.எல்.ஏ., க்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களுடைய பிரச்சாரம் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பது இது வரை நடந்த பிரச்சாரங்களில் தெரிகிறது.
அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமமுக டிடிவி தினகரன் ஆகியோரின் பிரச்சாரம் தொகுதி மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பே பெற்று வருகிறது. இவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்கவும் மக்கள் மனதில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுகளை மீண்டும் கொண்டு வரவும் அவர் இப்போது இல்லை என்கிற குறையை போக்கவும், அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் கிராம மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, அதிமுக தலைமை ஒரு ரகசிய திட்டம் தீட்டியுள்ளது.
சட்டசபை தேர்தல் பிரச்சாரம் வரும் 17-ல் முடிகிறது. இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசும் வீடியோ தொகுப்பு, பிரமாண்ட திரைகளில் ஒளிபரப்பு செய்வதற்கு நான்கு தொகுதிகளிலும் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
இந்த வீடியோ தொகுப்பில் ஜெயலலிதாவின், ஒரு நிமிட பேச்சு உருக்கமாக இடம் பெறும். அது தொண்டர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின், தினகரன் ஆகியோரின் பிரச்சாரத்தை சமாளிக்கும் விதமாக இருக்கும் என்கிறார்கள் அதிமுக கட்சியில் உள்ள நிர்வாகிகள்.