தமிழ்நாட்டில் புதியதாக உருவான ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் எல்லாம் முடிந்து தற்போது, வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கட்சிகளின் சார்பாக இருக்கும் வேட்பாளர்களுக்குக் கட்சியின் பெரும் புள்ளிகள் ஆதரவு திரட்டி வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இந்து மாலா மற்றும் ஆடல் அரசுக்கு கைக்கடிகாரம் சின்னத்திலும், பஞ்சமாதேவி கள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரபாகரனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பஞ்சமாதேவி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ராஜேஸ்வரிக்கு கை உருளை சின்னத்திலும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த தேர்தல் பரப்புரையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.