சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுநருக்கும் திமுக அரசிற்குமான பனிப்போர் தற்பொழுது வரை நீடித்து வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், பேரவையில் அங்கமாக விளங்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக ஆளுநர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான அழைப்பு மலரில் மத்திய அரசின் இலச்சினையும், தமிழக ஆளுநர் என்ற சொல்லும் இருந்த நிலையில், இந்த முறை குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழில் 'தமிழ்நாடு' என்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை பொறித்தும் ஆளுநர் மாளிகை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதற்கு முன்பும் ஆளுநர் மீது இருந்த முரண் காரணமாக அவரின் தேநீர் விருந்து நிகழ்வுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிகள் புறக்கணித்திருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கது.