
இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில் உள்ள பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடத்தில் சுமார் 2.5 கி.மீ தொலைவுக்கு முதற்கட்டமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் மாதம் (21.03.2025) மாலை நடைபெற்றது.
இந்நிலையில் பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை நேற்று (28.04.2025) நடைபெற்றது. இந்த சோதனையோட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சோதனையின் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4இல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை 2ம் கட்டப் பிரிவின் முதல் வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ இரயில் ஓட்டத்தை தொடர்ந்து, ஏப்ரல் 28ஆம் தேதி (28.04.2025), போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ இரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும். படிப்படியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் கூறுகையில், ‘இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4இல் உயர்மட்ட வழித்தடத்தில் இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வழித்தட சோதனை மெட்ரோ இரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம்’ என்று கூறினார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர். ராஜேந்திரன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என மெட்ரொ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.