தமிழகத்தில் மையம் கொண்ட 'நிவர்' புயலால், தனியார் விமானங்கள் இரண்டு நாட்களுக்குத் தங்களுடைய சேவையை ரத்து செய்திருந்தது. மீண்டும், இன்று தங்களுடைய சேவையைத் துவங்கியது விமான நிறுவனங்கள். உள்நாட்டுச் சேவையில் இயக்கப்பட்டு வரும், 'இண்டிகோ' விமானம் வழக்கம்போல சென்னையில், காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு, 68 பயணிகளுடன் திருச்சி வந்து சோ்ந்தது. பின்னா், இந்த விமானம் சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதில் பயணிக்க இருந்த, 58 பயணிகளில், 42 போ் டெல்லி, மும்பைக்குச் செல்ல வேண்யடியதால், ஹைதராபாத் செல்லும் விமானம் மூலம் அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில், சென்னைக்குப் பயணிக்க வேண்டிய 16 பயணிகள் இன்று மாலை புறப்பட உள்ளனா்.
இச்சம்பவம் குறித்து விசாரித்ததில், இண்டிகோ விமானிக்குத் தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனா். இதனால், காலை புறப்பட வேண்டிய விமானம், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விமானத்தில் பயணிக்கப் பதிவு செய்திருந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விமானம் ரத்தானதால் பயணிக்க முடியாமல் போனது.
மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில், வெளியிடப்பட்ட அறிவிப்பில், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழ்நாடு ஆறாம் இடத்தைப் பிடித்திருந்தது. இதற்கான விருதை, டெல்லியில் நடக்கும் மத்திய அரசு நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் சென்னையில் பெற்றுக்கொள்ளச் செல்ல வேண்டிய நிலையில், விமானம் ரத்தானதால், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
இதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம், இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.