
கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருவாய், சட்டம் மற்றும் சிறை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஐ.பெரியசாமி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மீதும், அவரது இரண்டு மகன்கள் மீதும் அப்போது இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு 2012இல் வழக்கு தொடுத்திருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையை திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது ஐ.பெரியசாமி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவித ஆதாரம் இல்லை என்று கூறி ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேரையும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2018இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது’ என்று கூறி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளார்.

முன்னதாக, வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடந்த 2017ஆம் ஆண்டு வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. அதே போல், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றத்தின் உத்தரவையும், சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.