Skip to main content

மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% ஒதுக்கீடு கோரி தி.க. வழக்கு!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

high court chennai

 
தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, திராவிடர் கழகத்தின் சார்பில், அதன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 


அந்த மனுவில், ஒவ்வொரு கல்வியாண்டும் மாநிலங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்நிலையில், 2020-ஆம் கல்வியாண்டுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை மருத்துவ கலந்தாய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 981 இடங்களில், 6,115 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு 111 இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கு 1,172 இடங்களும், பட்டியலின மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், பழங்குடியினத்தவர்களுக்கு 573 இடங்களும், பட்டியலின மாற்றுத் திறனாளிகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல,  பல் மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 274 இடங்களில், 211 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 42 இடங்கள் பட்டியலினத்தவர்களுக்கும், 21 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 


ஆனால்,  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு என, தனியாக எந்தவித ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.  

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மேலும், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 941 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்த இடங்கள் மாநில அரசு வசம் இருந்தால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  உரிய பங்கைப் பெற்றிருப்பர்.  

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், மருத்துவ மேற்படிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சட்டவிதிகளையும் மீறிய செயலாகும். 
 

http://onelink.to/nknapp


சட்டவிதிகளின்படி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்