தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் அவர்கள் வேட்பாளரையும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் தலைவர் வைகோ, நேற்று (18.03.2021) சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம் உள்ளிட்டவற்றைப் பேசினார், மேலும் அவர், “நான் உலக அரசியலை உற்று கவனிப்பவன். பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராக ஆகும் முன்பு செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் மாதம் இரண்டுமுறை தனது தொகுதிக்குச் செல்வார். தன்னுடைய தொகுதிக்குச் சென்று அனைத்து மக்களையும் சந்திப்பார். அவர்களின் குறைகளைக் கேட்பார். அந்தக் குறைகளைப் போக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார்.
அவருக்குப் பிறகு அதுபோல், வாரம் ஒருமுறையாவது தன்னுடைய தொகுதிக்கு வருகிற ஒரு அரசியல்வாதி இருக்கிறாரா என்று நானும் பார்க்கிறேன். அப்படி வந்து பார்ப்பவர் ஸ்டாலின்தான். அவர் வீட்டில் இருக்கிறாரா? அல்லது தொகுதியில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. அதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை.
சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது, 9 பாலங்கள் கட்டப்பட்டன. இந்தியாவில் இதுபோன்று வேறெங்கும் நடக்கவில்லை. அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று பேசினார்.