Skip to main content

குட்கா முறைகேடு வழக்கு; மத்திய அரசு முக்கிய அனுமதி

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

Malpractice case; The central government is the main decision, ex minister vijayabaskar

 

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் கிடைத்த தகவலின்படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

 

இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

 

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்