Skip to main content

''விலை போகாதீர்கள், அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...'' - மா.செ. கூட்டத்தில் அட்வைஸ்..!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

dddd

 

வரும் 27ஆம் தேதி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகும் நிலையில், கடந்த 18ஆம் தேதி முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், சசிகலா குறித்து கேள்விக்குப் பதிலளித்தபோது, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

 

இதையடுத்து அதிமுகவிலும், அமமுகவிலும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி பயணம் முடிந்தவுடனேயே அவசரம் அவசரமாக 27ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைக்கப்படுகிறது என்று அறிவித்ததோடு, 22ஆம் தேதி அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் ஜனவரி 22ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலா விடுதலை மற்றும் அதன் பிறகு அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து சிலர் பேசினர் என்றும், அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும், ‘அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அதிமுகதான் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கப்போகிறது. 

 

ஆகையால் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எண்ணம் யாருக்கும் வேண்டாம். வெற்றி என்ற இலக்குடன் பணியாற்ற வேண்டும். அதிமுக நிர்வாகிகள் யாரும் துரோகங்களுக்கு விலை போகாதீர்கள். யாரும் வேறு யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம்’ என பேசினார்கள் என்றும் கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்