புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானும், திமுக வேட்பாளராக டாக்டர் முத்துராஜாவும் போட்டியிடும் நிலையில் தேர்தல் களம் படுசூடாக உள்ளது.
இங்கு மநீம வேட்பாளராக களமிறங்கியுள்ள கார்த்திக் மெஸ் மூர்த்தி டெங்கு காலத்தில் நிலவேம்பு குடிநீர், கரோனா காலத்தில் கபசுரக்குடிநீர் வழங்கியதோடு கரோனா ஊரடங்கு நேரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கியதோடு கிருமி நாசினியாக நாட்டு மாட்டு சாணம், கோமியங்களையும் தனி ஆளாக தள்ளுவண்டியில் வைத்து வீடு வீடாக கொடுத்தார். இவரது இந்த நடவடிக்கையை நகர மக்கள் பாராட்டிவருகிறார்கள்.
இந்த நிலையில் வழக்கம் போல அனைத்து வேட்பாளர்கள்போல இன்று வாக்கு சேகரித்து வந்தார். அப்போது புதுக்கோட்டை கீழ 4ம் வீதியில் பிரச்சாரத்தில் இருந்த மநீம வேட்பாளர் மூர்த்திக்கு ஒரு ஃபோன் வந்தது. அதையடுத்து பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மருத்துவக்கல்லூரி நோக்கி பயணித்தவர், 'ரத்ததானம்' செய்தார்.கடைசி நேர பிரச்சாரத்தின் போதும்கூட பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ரத்தம் கொடுக்கச் சென்ற வேட்பாளர் மநீம மூர்த்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.