தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வனவாசியில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (03/04/2021) தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது, "எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஜானகியை நல்லடக்கம் செய்ய இடம் தர மறுத்தவர் கலைஞர். காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தவர் கலைஞர். காமராஜருக்கும், ஜானகிக்கும் கலைஞர் எடுத்த அதே முடிவைதான் கலைஞருக்கும் நாங்கள் எடுத்தோம். வீட்டில் ஒருவராக எண்ணி எனக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்யுங்கள். எனக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய எடப்பாடி தொகுதி விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வளர்ச்சிப் பணிகளை முதல்வராக மேற்கொண்டது நான்தான். முதலமைச்சரான பிறகு எடப்பாடி தொகுதிக்கு 65 முறை சென்று வந்துள்ளேன்; ஸ்டாலின் அவரது தொகுதி பக்கமே போனதில்லை. கடந்த 45 ஆண்டு காலமாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றிப் பெற்றதில்லை" என்றார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மணியை ஆதரித்து வாக்குச் சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வின் வெற்றிக் கோட்டை. ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தைப் போட்டு வெற்றி பெற்று விடலாம் என நினைக்கும் ஸ்டாலின் கனவு நிறைவேறாது. தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி; அ.தி.மு.க. கூட்டணி ஒருமித்த கருத்துக் கொண்ட வெற்றிக் கூட்டணி. வேளாண் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை உன்னிப்பாகக் கவனித்து செய்து வருகிறோம். அ.தி.மு.க.விற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏழை என்ற சாதியே இல்லாத நிலையை உருவாக்குவோம். 2010- ஆம் ஆண்டு தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் கொண்டு வரப்பட்டது. அதனை ஜெயலலிதா எதிர்த்தார். தி.மு.க.வில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாராலும் முன்னேற முடியாது" எனத் தெரிவித்தார்.