தமிழத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பரபரப்பாகியுள்ளது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளருமான சரத்குமார், "மக்கள் நீதி மய்யம்- சமத்துவ மக்கள் கட்சி- ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமலஹாசன்தான். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அழுத்தம் தரும் வகையில் எங்கள் கூட்டணி இருக்கும். வாக்கு வங்கியை எதிர்பார்த்து சுயநலமான முடிவாக உள் இடஒதுக்கீடு வழங்கியுள்ளனர். கோவில்பட்டியில் ராதிகா போட்டியிட்டால் அவரது வெற்றி உறுதியாகிவிடும்" என்றார்.
இந்நிலையில் சரத்குமாருக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு எதிராக தமிழகத்தில் கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.