
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் உற்சாகம் அடைந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சேலத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உயர்நீதிமன்ற அமர்வுக்கு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் மீது ஏற்கனவே எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை (செப். 2) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, சேலத்தில் அண்ணா பூங்கா அருகில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து மாலை அணிவித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மாநகரம், கொண்டப்பநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி, அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சேலம் மேற்கு ஒன்றியக்குழு செயலாளர் ஏ.வி.ராஜூ தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். எடப்பாடியை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக செம்மலை கூறியது: அதிமுக ஜனநாயக ரீதியான இயக்கம். 1.50 கோடி தொண்டர்களும் ஒற்றைத் தலைமை தேவை என்ற கருத்தை வெளிப்படுத்தினர். அதன்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது.
தற்போது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், பொதுக்குழுவின் முடிவை உறுதி செய்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த விதிகளின்படி தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படியே தொண்டர்கள் மூலம் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதிமுகவில் கடந்த ஒரு வார காலமாக நிலவிய குழப்பத்திற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இவ்வாறு செம்மலை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பாலசுப்ரமணியம், முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சக்திவேல், ரவிச்சந்திரன், செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.