Skip to main content

மக்கள் நீதி மய்யம் எதிர்காலம் எப்படி இருக்கும்? கமலை சந்தித்த பின்னர் அமீர் பதில்

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
ameer


 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமீர்,

 

நான் கலந்து கொண்ட விஷயங்கள், நான் கலந்து கொண்ட போராட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டேன். இதுதான் இன்றைய நிகழ்வு. இதைத்தாண்டி எனக்கும் அவருக்குமான உறவு நீண்ட நெடிய கால உறவு. 

 

என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் அந்த கட்சியின் மேடையில் ஏற மாட்டேன். அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பது அவருக்கு தெரியும். இன்றைக்கும் அந்த பயணம் தொடருகிறது.

 

அதுபோலத்தான் கமல்ஹாசனுடைய உறவு என்பது. அந்த உறவில் பிரிவு இருக்காது. மக்களுக்கான போராட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள். மக்களை எப்படி அணுகுகிறீர்கள். எப்படி எதிர்கொள்கிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தை மக்கள் எப்படி நினைக்கிறார்கள். மக்கள் பார்வையில் எப்படி மக்கள் நீதி மய்யம் இருக்கிறது என்பது பற்றி அறியதான் உயரிய நோக்கத்துடன் அழைத்திருந்தார். நானும் என்னுடைய கருத்தையும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்தையும் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் பேசினேன். 


 

2009ல் ஈழப் பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது அன்றைக்கு துணை முதல் அமைச்சராக இருந்த ஸ்டாலின் ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார். அந்த மனித சங்கிலி போராட்டத்தில் இயக்குநர் சங்கத்தையும் மீறி கலந்து கொண்டேன். என்னுடைய நோக்கம் அரசியல் கிடையாது. எப்படியாவது அந்த போரை நிறுத்த வேண்டும் என்பதுதான். போரை நிறுத்த வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து வரும்போது அவர்களுடன் நிற்பேன். 


 

உங்கள் பார்வையில் மக்கள் நீதி மய்யம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


 

மக்கள் எல்லோரையும் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேதான் மக்கள் நீதி மய்யத்தின் பார்ட் என்ன என்று சொல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. ஆகவே மக்கள் அந்த தேர்தலை நோக்கித்தான் இருப்பார்கள். இதில் மக்கள் நீதி மய்யம் என்ன ஆகும். ரஜினி மக்கள் மன்றம் என்ன ஆகும் என்பதெல்லாம் இல்லை.  
 

 

இதேபோல் ரஜினி மக்கள் மன்றம் அழைத்தால் போவீர்களா?

 

நல்ல விஷயத்துக்காக அழைத்தால் போவேன். ஆளும் கட்சி மீதும், எதிர்க் கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். புதிய தலைமை வேண்டும் என்று மக்கள் நினைக்கும்போது, வரக்கூடிய தலைமை எந்த சித்தாந்தத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். அந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் ஒருவருடன் நாம் சேர முடியுமே தவிர, வெறும் பிம்பத்தை பார்த்து சேர முடியாது. இவ்வாறு கூறினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.