தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, 'மக்கள் பிரதிநிதி சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்காக நாங்கள் அனுப்பிய ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு ஆட்சேபனை குறித்து தெரிவிப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க அறிவுறுத்தியது. இதில் அ.தி.மு.க. மற்றும் சிலரும் ஆட்சேபனை தெரிவித்தார்கள். ஜெயலலிதா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க. தரப்பில் கூறிவந்தார்கள். அதிமுக தரப்பு கூறியதற்கு நாங்கள் உரிய விளக்கத்தை கொடுத்தோம். இதனை ஏற்று தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்திருக்கிறது என்றும் கூறினார். தற்போது அமமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு சென்று விட்டதால் ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு இல்லாத காரணத்தால் சில மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ஒன்றிய, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளை கைப்பற்றி தன் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் டி.டி.வி.தினகரன் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் தினகரன் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தினகரன் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் சென்றால் அதிமுகவை கடுமையாக பாதிக்கும் என்று அதிமுக தலைமை நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.