Skip to main content

“மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியுடன் இருக்க வேண்டும்..” ஜி.கே.வாசன்

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

"The central government must remain steadfast in the matter of the Megha Dadu Dam." GK Vasan


ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 9ந் தேதி (இன்று) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்படைய வைத்துள்ளது. மத்திய மாநில அரசுகள் அதற்கான வரிகளை குறைப்பதுடன், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒரு நிபுணர் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

மத்திய மாநில அரசுகள் முயன்றவரை மக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க வேண்டும். தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கும் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்காமல் விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பயிர் காப்பீடு இழப்பீட்டை அந்தந்த பருவத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மின் இணைப்பு பெறுவதிலும் மாற்றம் செய்வதில் உள்ள நடைமுறையை எளிதாக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காலம் தாழ்த்தாமல் கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களும் முழு மானியம் கொடுக்க வேண்டும். டீசல் விலை உயர்வால் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர், உழவு எந்திரம், அறுவடை எந்திரம் உள்பட அனைத்து எந்திரங்களுக்கும் அதன் வாடகை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. எனவே மத்திய மாநில அரசுகள் டீசல் மானியம் வழங்க வேண்டும்.

 

காவிரி உள்ளிட்ட நீர் உரிமை சார்ந்த தடுப்பணை விஷயங்களுக்கு மத்திய அரசுடன் பேசி விவசாய நலன் சார்ந்த உரிமைகளை மாநில அரசு காத்திட வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டியது ஏற்புடையவை அல்ல. தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் திட்டங்களை ஏற்க முடியாது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியதில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியுடன் இருக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். கல்வியில் ஒருபோதும் அரசியல் நுழையக் கூடாது என்பது எங்கள் நிலை. நீட் தேர்வை பொருத்தவரை அது அகில அளவில் நடக்கக் கூடியது. தமிழகத்தில் அரசியல் காரணமாக ஒரு சிலர் வேண்டும், ஒரு சிலர் வேண்டாம் என்று கூறி வருகின்றனர். 

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக கூடுதலாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதுவரை மாணவர்களை யாரும் குழப்ப வேண்டாம். அதிமுக தலைமையிலான த.மா.கா. கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்.  புதிய அரசு கரோனா மூன்றாம் அலைய கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை என்பது வரும் காலங்களில் எங்கும் இருக்கக்கூடாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்