தமிழ்நாடு பாஜக தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் அண்ணாமலை. பொதுவாக, புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் கட்சியின் தலைமையகத்துக்கு வந்து முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொள்வர். அதற்கு அத்தாட்சியாக கட்சியின் கோப்பில் புதிய தலைவர் கையெழுத்திடுவார்; மூத்த தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார். அதன் பிறகே மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடும் வகையில் புதிய தலைவரின் சுற்றுப்பயணத் திட்டங்களை வகுப்பார்கள். அப்படி அவர் சுற்றுப்பயணம் செய்யும்போது மாவட்ட அளவில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும். இதுதான் எல்லா கட்சிகளிலுமே பொதுவான நடைமுறை. பாஜகவிலும் இதுதான் இதுவரையிலும் நடந்தது. ஆனால், இந்தமுறை அதில் மாற்றத்தைப் புகுத்தியுள்ளனர். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, முறைப்படி இன்னும் பதவியேற்கவில்லை. வருகிற 16ஆம் தேதி பதவியேற்கிறார்.
இந்த நிலையில், பதவியேற்பதற்கு முன்பே, மாவட்ட வாரியாக அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்க தமிழ்நாடு பாஜகவில் திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, கோவையிலிருந்து சென்னைக்கு சாலை வழியாக அழைத்து வரப்படுகிறார் அண்ணாமலை. பல்வேறு மாவட்டங்களையும் அவர் டச் பண்ணுகிற மாதிரி ப்ரோக்கிராம் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி அழைத்துவரப்படும் அண்ணாமலைக்கு அந்தந்த மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுக்கவிருக்கின்றனர். இதற்காக தடபுடல் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அப்படிப்பட்ட ஏற்பாடுகளுடன் சென்னை கமலாலயம் வரும் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தலைமையில் பொறுப்பேற்கிறார். தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் பலர், அண்ணாமலையை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைக்கவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்துகொள்கிறார். பதவியேற்பதற்கு முன்பே இவ்வளவு அலப்பறைகளா, என்று இப்போதே முணுமுணுப்புகள் கேட்கத் துவங்கிவிட்டன.