இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக சார்பில் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக மற்றும் பாஜக சார்பில் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் தேமுதிக சார்பில் விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் கூட்டணி கட்சிகளிடம் கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.