ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டங்களில் உள்ள 20 ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள வைஸ்யா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை 11 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதுகுறித்து விசாரித்தபோது, வாக்கு எண்ணிக்கை பணிக்கு ஒதுக்கப்பட்ட ஊழிர்களுக்கு, விதிமுறைகள் என்னென்ன? ஒவ்வொரு டேபிளிலும் எத்தனை மேற்பார்வையாளர்கள் இருக்க வேண்டும்? ஒரு வேட்பாளருக்கு எத்தனை முகவர்கள் அனுமதிக்கலாம் போன்ற அடிப்படை தகவல்களே இன்று காலையில்தான்தான் சொல்லியுள்ளனர். மேலும் பெட்டியை உடைத்து நான்கு விதமாக வாக்குச்சீட்டுக்களை பிரிப்பதற்கே காலை 11 மணி ஆகவிட்டது. மாவட்டம் முழுக்கவே இதேபோல் 11 மற்றும் 11.30 மணிக்கு மேல்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் இந்த மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர நாளை அதிகாலை 4 அல்லது 5 மணி வரை ஆகலாம் என்கிறார்கள்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, எட்டு வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பலர் புதியவர்கள். அவர்கள் போதிய விவரங்கள் தெரியவில்லை. ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாததால் வாக்கு எண்ணிக்கை தொடங்க காலதாமதமானது என்றனர்.
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தெரிந்துகொள்ள ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மீடியா சென்டர் அமைத்திருப்பார்கள். ஆனால் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் மீடியா சென்டர் மையம் ஏற்படுத்தவில்லை. உரிய தகவல்கள் தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் முயற்சி செய்தபோது, காவல்துறையினர் உள்ளே செல்லவிடாமல் தடுக்கின்றனர். இதனால் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை.