உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அறிவாலயத்தில் புகார்கள் குவிகின்றன. பல மாவட்டங்களில் திமுக மா.செ.க்களுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அறிவாலயத்திற்கு சென்ற புகார்களில் அதிகப் பரபரப்புகளை எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் திமுக பஞ்சாயத்து. திருவள்ளுர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கும்பிடிப்பூண்டி வேணு. கும்முடிப்பூண்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 17 இடங்களை அ.தி.மு.க.விடமும் சுயேட்சையிடமும் இழந்துள்ள திமுக, வெறும் 9 இடங்களை மட்டுமே கைப் பற்றியிருக்கிறது. மா.செ.வேணுவும் அவரது மகன் ஆனந்துமே இதற்கு முழு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகள், "கும்முடிப்பூண்டி ஒன்றியம் தி.மு.க. விற்கு எப்போதுமே வலிமையான வெற்றியை கொடுக்கக் கூடியது. 26 இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு 3 இடங்களை மட்டுமே ஒதுக்கி விட்டு, 23 இடங்களில் போட்டியிட்டது திமுக. போட்டியிட்ட இடங்களில் கட்சிக்கு சம்பந்தமில்லாத பல பேருக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதன் பின்னணியில் லகர கணக்கில் வைட்டமின்கள் விளையாடின.
உதாரணத்திற்கு, சித்தராஜ கண்டிகை வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் சீட் கேட்டிருந்தார். அந்த பகுதியில் மக்களிடம் செல்வாக்கு மிக்கவர். ஆனால், இவருக்கு சீட் மறுக்கப்பட்டு, கட்சிக்கு அறிமுகமில்லாத பிரபாகரன் என்பவருக்கு சீட் கொடுத்தனர். சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஜெயச்சந்திரன், உடனே, ஊராட்சி செயலாளர் பதவியிலிருந்து விலகி, சுயேட்சையாக களமிறங்கினார். தேர்தல் முடிவில்,1100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுவிட்டார் ஜெயச்சந்திரன். தி.மு.க.விற்கு அங்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது.
ஜெயச்சந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டதைப் போலவே பல இடங்களில் மக்களிடம் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு சீட் வழங்கினர். அது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வினரிடம் வைட்டமின் பெற்றுக்கொண்டு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதும் நடந்திருக்கிறது. அதற்கு பிரதிபலனாக, அதிமுக போட்டியிடும் இடங்களில் டம்பி வேட்பாளர்களை நிறுத்தினர். ஆக, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியதன் பின்னணியில் அதிமுகவோடு ரகசிய ஒப்பந்தமும், அதற்காக சீட்டுகள் விற்கப்பட்டதும்தான் காரணங்களாக இருக்கின்றன. இது குறித்து அறிவாலயத்துக்கு புகார்களை அனுப்பியுள்ளோம் ‘’ என கொட்டித்தீர்த்தனர்.