அதிமுக - பாஜக கூட்டணியின் பிரச்சார பீரங்கி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை பாலவாக்கத்தில் இன்று 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று மாலை அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் இருக்கிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அழைத்தனர். இன்று இலங்கை செல்வதால் பாஜக சார்பாக முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்று அந்நிகழ்வில் பங்கேற்பார். உயிரைக் கொடுத்து பாடுபட்டு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேலை செய்வோம். நிச்சயமாக பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவின்போது அதிமுக வேட்பாளர் வெற்றி வேட்பாளராக மாறி வருவார் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.
இலங்கையில் மூன்று நாள் பயணத்தை முடித்து வந்த பிறகு நிச்சயமாக ஈரோடு தேர்தல் களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது எங்கள் கடமையாக இருக்கும். அதை செய்வோம். தமிழக முதல்வர் இரண்டு நாள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது ஒரு இடைத்தேர்தல். ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் முடிந்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் ஈரோட்டில் தான் இருக்கின்றனர். திமுகவின் இந்த நடவடிக்கைகள் அதன் பயத்தை காட்டுகிறது.
நாடாளுமன்ற தொகுதிக்கான 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். அதில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே தோற்றார். அந்த வேட்பாளர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக உள்ளார். அந்த வேட்பாளர் வாயை திறந்தால் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுகள் வந்து விழும். ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்னும் வாய் திறந்து பேச ஆரம்பிக்கவில்லை. எங்கள் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ். இளங்கோவன் தான். அவர் அந்த பக்கம் பேச ஆரம்பித்தால் மீட்டர் மாதிரி ஓட்டுகள் வந்து விழும். 2014 மற்றும் 2019 தேர்தலில் ராகுல் காந்தி எப்படி எங்களுக்கு பிரச்சார பீரங்கியாக இருந்தாரோ 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சார பீரங்கியாக இளங்கோவன் இருப்பார்” எனக் கூறினார்.