தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
10 சட்ட மசோதாக்கள் இன்னமும் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் காத்திருக்கிறது. கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த விசாரணையின் பொழுது இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வரும் தமிழக ஆளுநரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேச தமிழக முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
தற்பொழுது புயல் நிவாரண பணிகள் மற்றும் மத்தியக் குழு ஆய்வு உள்ளிட்ட பணிகள் இருப்பதால் இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு வருவதாக தமிழக முதல்வர் தரப்பில் பதில் தகவல் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.