கர்நாடக மாநிலத்தின் 24ஆவது முதல்வராக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்றுள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் மே 15ஆம் தேதி வெளியாகிய நிலையில், எந்தக் கட்சிகளும் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெறாத நிலையே இருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்தது. ஆனால், 104 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த பா.ஜ.க.வை தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கடந்த மே 19ஆம் தேதி கர்நாடக சட்டசபையில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், 56 மணிநேரமே முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, 117 தொகுதிகளில் பெரும்பான்மையைக் கொண்ட ம.த.ஜ. - காங்கிரஸ் கூட்டணி தலையிலான குமாரசாமி அரசு இன்று ஆட்சியமைக்கிறது. இன்று மாலை கர்நாடக சட்டசபையின் முன்பு அமைக்கப்பட்ட மேடையில், கர்நாடக மாநிலத்தின் 24ஆவது முதல்வராக ம.ஜ.த. தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஷ்வராவும் பதவியேற்றனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.