கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சித்தாப்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் காணும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியாங்க் கார்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், "பிரதமர் மோடி கல்புர்கி வந்த போது பஞ்சாரா சமூகத்தின் பிள்ளை நான் என்று பெருமைப்படுத்திக் கொண்டார். ஆனால், பாஜக ஏற்கனவே எஸ்.சி வகுப்பினர் இட ஒதுக்கீட்டில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதால் பிரதமர் மோடி தகுதியற்றவர் என்றே சொல்ல வேண்டும்.
கல்புர்கி வரும்போதெல்லாம் மோடி பஞ்சாரா சமூகத்தைப் பார்த்து நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். டெல்லியில் உங்கள் சமூகத்தை சார்ந்த பிள்ளை அமர்ந்துள்ளான் என்று கூறுகிறார். இப்படி ஒரு தகுதியற்ற நாயகன் டெல்லியில் அமர்ந்திருந்தால் எப்படி இங்கே குடும்பம் நடக்கும் என்று கேட்க வேண்டியுள்ளது.
ஷிகாரிபுராவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடந்தது எதற்கு? பஞ்சாரா சமூகத்தினருக்கு அநீதி ஏற்பட்டதால் தான். கல்புர்கியிலும் ஜேவர்கியிலும் பந்த் கடைபிடிக்கப்பட்டது எதற்காக? எஸ்.சி வகுப்பினர் இட ஒதுக்கீட்டில் பாஜக அரசு குழப்பம் ஏற்படுத்தியதால் தான்" என்று பேசினார்.
பிரியாங்க் கர்கேயின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே,பி.நட்டா, "காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பது அவர்கள் மோடியை அவதூறு பேசுவதில் இருந்தே தெரிகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தியை மகிழ்விக்கத் தான் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை விமர்சிக்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பிரதமரின் மதிப்பு உயரத்தான் செய்யும்" என்று கூறியுள்ளார்.