
நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே அமலாக்கப்படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான ஆலோசனைகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது, மாணவர்களுக்கான காலை நேர உணவு திட்டம் நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி கூடுதலான நிதி ஒதுக்கீடு, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி, மாநகராட்சிகளில் 30 இடங்களில் முதல்வர் படிப்பகம் ஆகிய அம்சங்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும்.
நடப்பு நிதியாண்டில் ஐந்து லட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் எனும் அறிவிப்பும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பதும் நல்ல அம்சம். அதேபோல, பெற்றோரை இழந்த மாணவ மாணவியருக்கு பதினெட்டு வயது எட்டும் வரை மாதம் ரூ.2,000/- வழங்கப்படுவது, ஆதரவற்ற முதியோருக்கு “அன்பு சோலை” எனும் பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படுவது, வளரிளம் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் தடுப்பிற்கான தடுப்பு மருந்து திட்டம் ஆகியவையும் நல்ல முன்முயற்சிகளாகும். அரசு ஊழியர் – ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்; அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது, புதிய நூலகங்கள், வெளிமாநிலங்கள் – வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஆகியவையும் வரவேற்கத்த நடவடிக்கைகளாகும்.
தமிழ்நாடு அரசின் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்த அறிவிப்போ, அதற்கான நிதி ஒதுக்கீடோ இல்லாமல் உள்ளது. குறிப்பாக பன்னிரெண்டு லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நாற்பதாயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனும் அறிவிப்பு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணிக்கொடை நிலுவை ஆகியவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது அந்த பகுதியினரிடையே பெரும் சோர்வை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அரசிடமும் நேரடியாக முறையிட்டுள்ளனர். இருந்தும்கூட, உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது மாற்றுத்திறனாளிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதோடு, நிதி நிலை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்குரிய நிதி ஒதுக்கீடு, மானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 3,796 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு தராமல் நிலுவை வைத்திருப்பது போன்ற செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய நிதியை பெற தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.