Skip to main content

த.வெ.க.வின் பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 14/03/2025 | Edited on 14/03/2025

 

Date announced for the tvk party general body meeting

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். மேலும் பிரபல அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 26ஆம் தேதி (26.02.2025) நடைபெற்றது. இதற்கிடையே கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார். அதாவது அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

அதில் 98 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள 22 மாவட்டத்திற்கான செயலாளர்கள் நேற்று (13.03.2025) நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 16 பேர் மட்டுமே நேற்று நியமிக்கப்பட்டனர். மற்ற 6 பேரின் நியமனம் கட்சியின் நிர்வாகக் காரணங்களுக்காகத் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின்  பொதுக் குழுக் கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுக் கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025 - வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.

கட்சி விதிகளின்படி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு நடைபெற உள்ளது. எனவே கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்