கர்நாடக மாநில அ.தி.மு.க. கட்சியின் செயலாளர் யுவராஜை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் யுவராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். அ.தி.மு.க.வினர் யாரும் யுவராஜ் உடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலாவை சந்திக்க யுவராஜ் சென்றதாகத் தகவல் வெளியான நிலையில், ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ். கூட்டாக அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.