நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த ரானெ பென்னூர் தொகுதி எம்எல்ஏ சங்கர், கோகக் மற்றும் அதானி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் மகேஷ் குமுதஹாலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 15-வது சட்டசபை கர்நாடகத்தில் கலைக்கப்படும் வரை, அவர்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் குறிப்பிட்டார்.
கர்நாடகவில் ஆட்சி அமைக்க சட்டசபையில் 112 உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும் என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தாலும் நீடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறுகின்றனர். அதே போல் கர்நாடக சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைகளை பாஜக தலைமை உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர்.