தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் களமிறங்கியிருக்கும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கில் போட்டியிடும் சக வேட்பாளர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'தேர்தலை ஜனநாயக முறைப்படி நேர்மையாக நடத்த உதவ வேண்டும். கோவை தெற்குத் தொகுதியில் தேர்தலை வெளிப்படையாக அமைதியாக நடத்த உதவவேண்டும். யார் வென்றால் நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய நகர்வில் கோவை தெற்குத் தொகுதி இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும். வென்ற வேட்பாளருக்குத் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும்' எனக் கூறியுள்ளார்.