நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருவரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. அதனை பொதுமக்கள் செய்துகொண்டே இருந்தால்தான் நாடு நலமுடன் இருக்கும். திராவிட மாடல் நேற்றோ, இன்றோ வந்ததில்லை. திராவிட மாடல் விரைவில் இந்தியாவுக்கான மாடலாக மாறும். திருச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதியை மத்திய அரசு தருவதில்லை.
உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையை விட தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் தொகை மிகமிக குறைவு. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அந்தத் தொகையில் செயல்படுத்தப்படுபவைதான் தமிழ்நாட்டின் திட்டங்கள். அந்த தொகையை அதிகரித்துக்கொடுத்தால் இன்னும் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்ய முடியும். பாஜக ஆட்சி வரும் போது என்ன சொன்னாங்க. சிலிண்டர் வாங்கும்போது பேங்கில் பணம் வரும் என்று சொன்னாங்க, ஆனால் வந்ததா?. சிலிண்டர் விலை இப்போது என்ன? கணக்கு பாருங்க. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது லாபத்திற்கு விற்ற அரசு அங்கே அமர்ந்திருந்தது. அதை விமர்சிக்க வேண்டியது நம் கடமை. அதை ஞாபகப்படுத்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.
தம்பி துரை வைகோவுக்காக இங்கே வந்திருக்கிறேன், எனக்காக இல்லை. இதில் என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது. நோ பெய்ன் நோ கெய்ன்.. வலியை தாங்கிக்கொள்ளுங்கள், நாளை நமதே என்று சொல்லியிருக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி? இந்த வடை பசியை ஆற்றாது. ஏனென்றால், இந்த வடை வாயினால் சுட்ட வடை, அது நோயாகத்தான் முடியும். இதையெல்லாம் நியாபகப்படுத்தி சொல்ல இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது இல்லை. இது சாதாரண காதல் அல்ல. அதையும் தாண்டி ரொம்ப புனிதமானது. எனக்கு மனிதன் தான் மதம். அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
அரசியலை விமர்சிக்க வேண்டியது நமது கடமை. சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காகவே வந்திருக்கிறேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். திராவிட மாடல் என்பது ஒரு சித்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை, இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிப் பார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும்.
தேசபக்தி என்பது பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது. தேசம் என்பது பாரபட்சம் இல்லாமல், அனைத்து மொழிகளையும் பாரபட்சமில்லாமல் பேசி மகிழ்ந்திருப்பது. இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லாத மாநிலம் என்றால், அது தமிழகம் மட்டும் தான். இதுவே ஒரு நல்ல அரசு, நல்ல நிர்வாகம், நல்ல அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளம். 1920 இல் ஜஸ்டிஸ் கட்சியால் தொடங்கப்பட்டது தான் இந்த மதிய உணவுத் திட்டம். அந்த கட்சி ஆட்சியில் இல்லாததால் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அதை கவனித்துப் பார்த்த காமராஜர், அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடர்ந்து முன்னோக்கி சென்றாலும் நம்முடைய முதல்வர் அதோடு காலை உணவுத் திட்டத்தையும் சேர்த்து வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் போன்றவற்றை இந்திய அளவில் நாம் செயல்படுத்தியதால் எத்தனையோ பல கோடி பெண்கள் பயனடைந்தார்கள். இந்த மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்பது மக்கள் நீதி மையத்தினுடைய திட்டங்களில் ஒன்று. ஆனால், அதை கிண்டல் அடிக்காமல் நம்முடைய முதல்வர் அப்படியே நிறைவேற்றி இருக்கிறார். எனவே, அதற்காகவே இன்று நான் இங்கு வந்து நிற்கிறேன்.
பல நேரங்களில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற அமைப்புகளை வேட்டை நாயை போல பயன்படுத்துகிறது. நான் ஒழுங்காக வரி கட்டுகிறவன். இதுவரை அவர்கள் எனக்காக வேலை பார்த்தார்கள். ஆனால் இன்று, அவர்களுக்கு வீட்டு வேட்டை நாய்களாக மாறிவிட்டார்கள். அதேபோல் முதல்வர்களை கைது செய்து விட்டோம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், அந்த முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் வாக்காளர்களும், பொதுமக்களும் ஆகிய நீங்கள் தான். அப்படி என்றால் அவர்கள் 100 கோடி மக்களை எதிர்க்கிறார்கள், கைது செய்ய துடிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்” என்று பேசினார்.