பெரம்பூர் அல்லது ஆர்.கே. நகர் பகுதியில் தபால் அலுவலகத்துடன் இணைந்த பாஸ்போர்ட் அலுவலகத்தை அமைக்கும்படி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்.பி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராயே எம். சிந்தியாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது, “எனது வடசென்னை நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வழங்கியுள்ள மனுவில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் அல்லது ஆர்.கே. நகர் பகுதியில் தபால் அலுவலகத்துடன் இணைந்த கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் அலுவலகத்தை அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக மேல்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா செல்வதற்கு என நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தாங்கள் அறிவீர்கள். இதனால் புதிதாக வெளிநாடு செல்ல முயலும் மக்களின் எண்ணிக்கை கூடி வருவதால், பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) இல்லாத இடங்களில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகம் அல்லது தபால் அலுவலகத்துடன் இணைந்து செயல்படும் வகையில், தபால் அலுவலகத்துடன் இணைந்த கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தை அமைக்கும் திட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை நாடெங்கும் 429 இடங்களில் இது போன்ற அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்றான எனது வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் கூட இல்லை. சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் முதலான இடங்களில் மட்டும் தற்போது கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இவை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளாகும். எனது தொகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு சற்று தொலைவான இடங்களில் அமைந்துள்ள கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
எனவே, எனது வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் அல்லது ஆர்.கே. நகர் பகுதிகளில் அமைந்துள்ள தபால் அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தையும் அமைத்து தபால் அலுவலகம் மற்றும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் (போஸ்ட் ஆபீஸ் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா) அமைத்துத் தரும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஒன்றிய வெளியுறவுத்துறை, தகவல் தொடர்பு துறையும் இணைந்து இத்தகைய தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்பதால் இக்கோரிக்கையை மேற்படி இரு அமைச்சகங்களுக்கும் ஏற்கப்பட்டு விரைந்து ஆவண செய்யப்படும் என்று நம்புகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.