திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர் தேன்மொழியும், திமுக சார்பில் கூட்டணிக் கட்சி வேட்பாளரான முருகவேல் ராஜனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இருவரும் தொகுதி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மாறி மாறி பேசி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரண்டு வேட்பாளர்களும் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் ஒரேநாளில் வெவ்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒரு இடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் முருகவேல் ராஜன், “ஆறு வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தேன்மொழி ஒருமுறையாவது இந்த தொகுதி பிரச்சினை குறித்து பேசியிருப்பாரா? தொகுதி வளர்ச்சிக்கு என்ன செய்தார்? தொகுதியில் ஒருவருக்காவது அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பாரா? தொகுதியில் அதிகமாக இருக்கிற அவர் சமுதாயத்துக்கு, சொந்த பந்தங்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா? பதவிக்காகவும பணம் சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இத்தனை வருஷமா அவர் இருந்திருக்கிறார்” என குற்றச்சாட்டுகளைப் போகுமிடமெல்லாம் சொல்லிவருகிறார்.
இதற்குப் பதில் சொல்லும் தேன்மொழி, “ஐந்து வருஷம் திமுக ஆட்சியில்தான் நான் எம்.எல்.ஏ., என்னால் எதுவும் செய்ய முடியல. ஒன்றரை வருஷமாத்தான் ஆளுங்கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தேன். நான் உள்ளூரில்தான் இருக்கேன். நிலக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ் பக்கத்துலதான் என் வீடு இருக்கு. எப்ப வேணாலும் நீங்க என்னை வந்து சந்திக்கலாம். உங்க கோரிக்கை எல்லாம் செய்து தருவேன். எனக்கு ஓட்டு போடுங்கள்” என்று பேசிவருகிறார்.
அதிமுக எம்.எல்.ஏ. மீதான விமர்சனங்களையும், திமுக வேட்பாளரின் பிரச்சார பேச்சும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், ‘திமுக வேட்பாளர் வெளியூர்; நான் உள்ளூர்’ என தனது பிரச்சாரத்தை முன்வைக்கும் தேன்மொழி, தனது அட்ரஸை சொல்லத் தொடங்கியுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.