வாக்கு எண்ணும் மையத்திற்குள் பதிவு செய்யாமல் ஒரு ஜீப் சென்று வந்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்பவர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போடி திமுக வேட்பாளரும், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சரவண குமார் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று (21.04.2021) வந்தனர். நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நேற்று முன்தினம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி ஒரு ஜீப் வந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்த ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட வேண்டும் என்று கோரினர்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்து, அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே உள்ளே அனுப்ப வேண்டும் என்றும், பதிவு செய்யாமல் வாகனங்களை அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் கூறினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜ், சையத் பாபு ஆகியோரிடம் தங்க தமிழ்ச்செல்வன் முறையிட்டார். பின்னர் ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கடந்த 13ஆம் தேதி இரண்டு போலீஸ் ஜீப்புகள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அங்கு வந்தது தெரியவந்தது.
அதில் ஒரு ஜீப் வெளியே சென்று வந்தது தொடர்பாக ஆவணங்களில் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த போலீஸ் ஜீப் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உணவு விநியோகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை திமுக வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “கடந்த 13ஆம் தேதி பதிவு செய்யாமல் ஒரு ஜீப் வெளியே சென்று வந்துள்ளது. இங்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களின் எண்களையும் பதிவு செய்ய வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். போடி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள் உள்ளன.
அதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக அந்தப் பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவற்றை தனியாக ஒரு அறையில் வைத்து, அதனை நோக்கி 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்வதாக தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்தனர்” என்று கூறினார்.