இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் மூத்த தலைவர்களுள் ஒருவருமான எஸ்.ஜி. முருகையன், மூத்த தலைவரான மணலி கந்தசாமி குறித்து திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பதிவில் தவறாக சித்தரித்து வெளியிட்டதாக எழுந்த விவகாரம் திருவாரூர், நாகை மாவட்டத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களைப் பற்றி முகநூலில் தான் பதிவிடவில்லை, ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட பதிவை யாரோ மாற்றி தனது முகநூலில் வெளியிட்டுள்ளாதாக ஜெயானந்த் மறுத்திருக்கிறார்.
இதற்கிடையில் திவாகரனையும், அவரது மகன் ஜெயானந்தையும் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினரும், புதிய தமிழகம் கட்சியினரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 20ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.ஜி. முருகையன் மற்றும் மணலி கந்தசாமி உள்ளிட்ட தலைவர்களை தவாறாகச் சித்தரித்து ஜெயானந்த் திவாகரன் என்கிற முகநூல் பதிவில் கருத்துகள் வெளியாகியிருந்தது. அதனைக் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கொதிப்படைந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.
இதனைக்ற கேள்விப்பட்டு அவசர அவசரமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு ஆதரவாளர்களோடு வந்த ஜெயானந்த், கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பற்றி தான் தவறாக எனது முகநூலில் பதிவிடவில்லை. யாரோ எனக்கு வேண்டாதவர்கள், அரசியலில் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட பதிவைத் திருத்தம் செய்து அமெரிக்காவில் இருந்து தனது முகநூலில் பதிவில் வெளியிட்டுள்ளனர். ஆகவே எனது முகநூலில் சித்தரித்து வேண்டுமென்றே அரசியலில் எனக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக இது போன்ற காரியத்தைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயானந்த் கூறுகையில், "கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக என் மீது புகார் அளித்திருந்தனர். அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளோம். என்னுடைய முகநூல் பதிவை வைத்து சர்ச்சை ஏற்பட்டதும் என் பழைய முகநூல் பதிவுகளைப் பார்த்தேன். அதில் நான் பதிவிட்ட கருத்துகள் மாற்றப்பட்டிருப்பதை அப்போது தான் கவனித்தேன். அந்தப் பதிவில் கிட்டத்தட்ட பல்லாயிரம் வார்த்தைகள் இருப்பதால் நடுவில் யாரோ அவதூறு ஏற்படும்படி திருத்தங்கள் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கருத்துகள் என் முகநூல் கணக்கு முடக்கப்பட்ட பிறகே திருத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் எனக்கு முகநூலில் இருந்து உங்கள் முகநூல் சவுத் டகோட்டாவில், சியாக்ஸ் பால்ஸ் என்கிற பகுதியில் இருந்து லாகின் செய்யப்பட்டுள்ளது. இது நீங்கள் இல்லை என்றால் உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுங்கள் எனச் செய்தி வந்துள்ளது. அந்தத் தகவலை அப்போது நான் கவனிக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு பார்த்துவிட்டு பாஸ்வேர்டை மாற்றிவிட்டேன். திருத்தப்பட்ட பதிவு கண்டுபிடித்து முழுமையாக நீக்கியதை, முகநூலில் இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வந்த மெசேஜ் குறித்த ஆவணங்களைக் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம்.
புகார் அளித்த முன்னால் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் அவர்கள் அந்தப் பதிவு என்னுடையதா என்பதை என்னை தொலைபேசியிலோ, நேரடியாகவே கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாதது ஏன் எனப் புரியவில்லை. பதிவு யார் போட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என ஒரு மூத்த தலைவர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
முகநூலை அடிப்படையாகக் கொண்டு வலம் வரும் வதந்திகளுக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்பது வியப்பாக உள்ளது. சிவபுண்ணியத்திற்கும் எங்களுக்கும் எந்தக் காலத்திலும் காழ்ப்புணர்ச்சி இருந்ததில்லை ஏன் இப்படிச் செய்தார். இவருக்கு பின்னால் யாராவது இருக்கிறார்களா, எங்கிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது எப்படி நடந்தது என்பது புரியவில்லை" என்கிறார்.
இந்த விவகாரத்தால் திருவாரூர் மாவட்டம் இரண்டு நாட்களாகவே பரபரப்பாக உள்ளது.