நாகை நாடாளுமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் த.செங்கொடியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஆனந்திடம் அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் புகார் அளித்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சட்டப்படிப்பு படித்துள்ள அமமுக வேட்பாளரான செங்கொடியின் குடும்பம் கம்யூனிச பாரம்பரியம் கொண்டது, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சில மனவருத்தத்தோடு அதிமுகவிற்கு தந்தையோடு சேர்ந்து அவரும் மாறினார். அப்போது அதிமுகவில் காட்டூர் சங்கத்தலைவராகவும் இருந்துவந்தார். பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதயமானதும் அக்கட்சியில் சேர்ந்து மாநில தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்துவருகிறார். இவர் தற்போது நாகை தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நேற்று 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது, இந்த சூழலில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரான தாழை சரவணன், அ.ம.மு.க. வேட்பாளர் செங்கொடி, காட்டூர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருக்கும் பொழுது பல லட்சம் முறைகேடு செய்துள்ளார். அவர் மீது புகார் இருக்கிறது. அதனால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். என புகார்கொடுத்துள்ளார்.
இதனை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். மற்ற அனைவரது வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் செங்கொடியின் வேட்புமனு மட்டும் ஒதுக்கி வைத்திருக்கும் சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த புகாருக்கு பின்னால் அதிமுக அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ் இருப்பதாகவும், அவரது தூண்டுதலின் பேரிலேயே புகார் கொடுத்து இருக்கிறார் என்றும் அதிமுகவினர் கிசுகிசுக்கின்றனர்.