தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் துணைதலைவர் "ஜெயலலிதா" என்கிற அதிமுக பெண் பிரமுகர், "மோகனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை மாற்றவேண்டும்" என திடீரென்று தர்ணா போரட்டம் நடத்தியுள்ளார்.
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் அறிவித்துவிட, நீண்ட இழுபறிக்கு பின் செவ்வாய்க்கிழமையன்று தங்களது வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை. இதில் ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் துணைதலைவர் ஜெயலலிதாவோ, "ஓட்டப்பிடாரத்தில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர் எவரும் இல்லை அதனால் உங்களுக்கு இந்த முறை நாங்கள் வாய்ப்பினை வழங்குகின்றோம் என வேட்பாளர் நேர்காணலின் போது ஓ.பி.எஸ்-ஸூம், ஈ.பி.எஸ்-ஸூம் தன்னம்பிக்கை தந்தனர். எனது பெயர் தான் கடைசி வரை வேட்பாளர் பட்டியலில் இருந்தது என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டு தான் தலைமை கழகத்தினை விட்டே வெளியே வந்தேன். ஆனால் மூன்று மணி நேரத்தில் பண பலத்தின் மூலம் எனது பெயரை நீக்கிவிட்டு அவர்களது பெயரை சேர்த்துக் கொண்டார்கள். தலைமைக்கு கட்டுப்பட்டு நான் இருந்தாலும், என்னுடைய ஆதரவாளர்கள் உங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் இந்த தர்ணா போராட்டம். தற்பொழுது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவரை தவிர மற்ற யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். இவருக்கு நாங்கள் எப்படி களப்பணி ஆற்ற முடியும்? அதனால் மோகனை மாற்ற வேண்டும். இதுதான் கோரிக்கையும் கூட" என அதிர வைத்தார் அவர்.
அதே வேளையில் விளாத்திக்குளம் மார்க்கண்டேயன் போல் சுயேச்சையாக போட்டியிடுவரா? என்பதனை வரும் நாட்களே முடிவு செய்யும்.