சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினே முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவின், முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.
நேற்று ஒரே நாளில் சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளைப் பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை. இந்த நிலைக்குக் காரணமான அரசு தலைகுனிய வேண்டும். நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினே முழு பொறுப்பு ஏற்கவேண்டும். நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் அதே கவனத்தைச் சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் செலுத்துமாறு திமுகவின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.